தினமலர் மதுரை 10-1-2003
ஒரு
காலத்தில் இந்தப் பெயரைக் கேட்டால் மதுரையே கதிகலங்கும்.. ரவுடி அண்ணாநகர்
ரமேஷ்.
இந்த ரமேஷ் கோஷ்டியும், தங்கவேலு கோஷ்டியுமென இரண்டு
ரவுடிகள் பட்டாளத்தின் அடுத்தடுத்து மோதல்களில் இந்தப் பக்கத்தில் 9
கொலைகளும் அந்தப் பக்கத்தில் 14 கொலைகளும் என அரங்கேறி மதுரை வீதிகள்
ரத்தம் தோய்ந்து போயின.
மொத்தம் 24 கொலை, கொலை முயற்சி வழக்குகள்... குண்டர்
தடுப்புச் சட்டத்திலே மூன்றாண்டுகளையும் விசாரணைக் கைதியாக ஆறாண்டுகளையும்
மதுரை, சேலம், சென்னை ஜெயில்களில் கழித்து போலீஸ் துறையையே அதிரவைத்த
ரவுடி அண்ணாநகர் ரமேஷ் இன்று கவிஞர் பி.ஆர். ரமேஷாக புதுவடிவம்
தரித்திருக்கிறார்.
'இப்போ நான் திருந்தி வாழ ஆசைப்பட்டுக் கத்தியைத் தூக்கிப்
போட்டுட்டுப் பேனாவைத் தூக்கியிருக்கேங்க. இந்த ரவுடி வாழ்க்கை யாருக்கும்
வேணாம்.. எங்க அம்மா என்னை நினைச்சே கவலையில் இறந்துட்டாங்க.. தாயைக்கூட
கவனிச்சுக்காத பாவியாகிட்டேன்.. அவங்ககிட்ட இருந்து தான் கடவுள் பக்தி,
இரக்கம், ஜாதிமத சகிப்புத்தன்மைன்னு நிறைய நல்ல விஷயங்களைக்
கத்துக்கிட்டேன். அவங்க இறந்த பின்னேதான் போய் பார்க்க முடிஞ்சது. என்
பெயரையே பி.ஆர்.னு பச்சைக் குத்திக்கிற அளவு நூற்றுக்கணக்கான இளைஞர்கள்
எனக்கு இருக்காங்க. அவங்களிடமும் திருந்தி வாழத்தான் பிரசாரம் செய்றேன்.
ஆரம்பத்துல எங்க கும்பல்ல இருந்தவங்களுக்காக 'இதயம் மாற போராடு..
இரக்கமற்றவர்களைத் துண்டாடு... துண்டாடும் நாளை நீ கொண்டாடு'ன்னு
புரட்சிகரமான வாசகங்களைத்தான் எழுதிக்கிட்டு இருந்தேன். ஒரு மூணு வருஷம்
முன்னே ஜெயில்ல நடந்த யோகா வகுப்பு நிறைவு விழாவுல நான் கவிதை படிச்சேன்.
ஜெயில் சூப்பிரண்டு ராஜ்குமார் என் கவிதை வரிகளைப் பெருமையா தன் பேச்சுல
எடுத்துச் சொல்லி உற்சாகப்படுத்தினாரு. அத்தோடு துணை ஜெயிலர் தாமரைச்
செல்வன் கற்பனைகளை விட்டுட்டு நடப்பு நிகழ்வுகளை எழுதுன்னு சொன்னாரு...
இந்த டானிக்தான் என்னை ஜெயில்ல இருக்கும்போது கவிதைகள் எழுதவச்சது.
அதையெல்லாம் தொகுத்துத்தான் இப்போ 'பாலைவனத்தில் நெற்கதிர்கள்'னு கவிதை
நூலாக வெளியிட்டிருக்கேன். இந்தப் புத்தகத்தோட வருவாயில பத்தாயிரத்து
நூற்றியொரு ரூபாயை இன்ஜினியரிங் படிப்பைத் தொடர முடியாத சமயநல்லூர்
கனகசபாபதி என்கிற மாணவருக்குத் தர இருக்கிறேன். அத்தோடு வைகை ஸ்ரீ
மீனாட்சி ரிசர்ச் பவுண்டேசன்னு ஒன்னு வச்சு ஊனமுற்ற, ஆதரவற்ற ஏழை
எளியவங்களுக்காக உதவி செய்யிற காரியத்திலும் இறங்கியிருக்கிறேன்...'
என்கிறார் இந்த 28வயது முன்னாள் ஜெயில்வாசியான இந்நாள் கவிஞர்.
காவி உடை தரித்து ஆந்திரமாநிலம் மந்த்ராலயத்து
ராகவேந்தருக்கு மாலை அணிவித்து விரதமிருந்து வருகிற ரமேஷ்... 'காளியம்மன்
ரொம்ப பிடிக்கும்... அப்போ பழி உணர்ச்சிகள் ஒத்துப் போச்சு. இப்போ
மென்மையான ராகவேந்தர் மேல ஈர்ப்பு அதான் மாலை போட்டிருக்கேன்... இனிமே
எப்பவுமே நான் வன்முறையை கையில் எடுக்கப் போறதில்லை. தவறு செய்தவன்
மனிதனல்ல, தன் தவறைத் திருத்தாதவன் மனிதனே அல்லன்னு நான் கவிதை
எழுதியிருக்கேன். இப்போ நான் திருந்திட்டேன்..' என்கிறார் ரமேஷ்.
செய்த தவறுக்கு வருந்தி வாழ நினைக்கிற இவரை இந்தச் சமூகம்
ஏற்பது அவசியம். அதேநேரம் இந்த வேதாளம் மீண்டும் முருங்கை மரம்
ஏறாதிருப்பதும் பேரவசியம். |