தினத்தந்தி 2-11-2002
மதுரை, நவ. 2- மதுரையில் திருந்தி வாழ நினைப்பதாகக் கூறும்
பிரபல ரவுடி ஒருவர் தன்னை போலீசார் சுட்டுக்கொல்ல நினைப்பதாக அச்சம்
தெரிவித்து உள்ளார்.
ரவுடி கும்பல்கள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை 2 ரவுடி
கும்பல்கள் கலக்கி கொண்டிருந்தன. ஒரு கும்பலின் தலைவன்
தங்கவேல். அவனுக்குப் பின்னால் 50 அடியாட்கள். இன்னொரு கும்பலின் தலைவன்
ரமேஷ் என்ற அண்ணா நகர் ரமேஷ். இவனுக்கு பின்னால் சில அடியாட்கள்.
இந்தக் கும்பல்களின் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு
என ஏராளமான வழக்குகள் நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பதிவாகி
உள்ளன. முன்விரோதம் காரணமாக இந்தக் கும்பல்கள் மோதிக் கொண்டபோது மதுரை
நகரில் 10-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்தன.
ரமேஷ் கைது
ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனான தங்கவேலை போலீசார்
சுட்டுக்கொன்றபோது நகரின் சட்டம்-ஒழுங்கு ஓரளவு
கட்டுக்குள் வந்தது. எதிர் கும்பலின் தலைவனான ரமேஷ் கைது செய்யப்பட்டு
ஜெயிலில் அடைக்கப்பட்டான். தொடர்ந்து 2 ஆண்டுகள் குண்டர் தடுப்பு
சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டான். அதே போலச் சுமார் 5 ஆண்டுகள்
விசாரணை கைதியாகச் சிறையில் இருந்தான்.
தற்போது விடுதலை ஆகி வெளியே வந்துள்ள அண்ணாநகர் ரமேஷ்
தன் மீது உள்ள அனைத்து வழக்குகளிலும் விடுதலை ஆகி உள்ளதாகக் கூறி
இருக்கிறார். மேலும் தன் மீது சுமத்தப்பட்டவை அனைத்தும் பொய்
குற்றச்சாட்டுகள் என்றும் தகாத நண்பர்களின் உறவால் தான் பாதிக்கப்பட்டு
விட்டதாகவும் திருந்தி வாழ நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
போலீஸ் மிரட்டல்
ஆனாலும் போலீசார் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏதேனும்
குற்றங்கள் நடந்தால் அதில் தன்னுடைய பெயரையும் இணைத்து சுட்டுக் கொலை
செய்து விடுவதாக மிரட்டி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
திருந்தி வாழ ஆசை
சிறு வயதில் பெற்றோரை இழந்த நான் முதன்முதலாக ஒரு கொலை
முயற்சி வழக்கில் சேர்க்கப்பட்டேன். என் மீது 20-க்கும் மேற்பட்ட
கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருந்தன. தற்போது அவற்றில்
குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டு உள்ளேன்.
ஆரம்ப காலத்தில் தகாத நண்பர்களுடன் பழகியதால்
வழக்குகளில் சேர்க்கப்பட்ட நான் ரவுடி கும்பலின் தலைவனாகச்
சித்தரிக்கப்பட்டேன். எதிர் கும்பலிடம் இருந்து என்னைக் காப்பாற்றிக்
கொள்ள ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தேன். ஆனால் தற்போது திருந்தி வாழ
நினைக்கிறேன்.
வாழ விடுங்கள்
சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது காவிரி
பிரச்சினைக்காகக் கைதிகளுடன் உண்ணாவிரதம் இருந்தேன். இனி மேல் எந்த ரவுடி
கும்பலுடனும் சேர மாட்டேன். ஆனால் போலீசார் என்னை திருந்தி வாழவிடாமல்
சுட்டுக்கொன்றுவிடுவார்களோ என அஞ்சுகிறேன். ஆன்மீகவாதியாக விரும்பும்
என்னை போலீசார் வாழவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். |