தமிழன் எக்ஸ்பிரஸ், செப். 8, 2005.
பதினான்கு வயதில் அரிவாளைத் தூக்கி ஆட்டம் போட்ட அண்ணாநகர் ரமேஷ்
ரௌடியிஸத்தைக் கண்டு அப்போது மதுரையே நடுங்கிப் போயிருந்தது. கொலை, கொள்ளை, வழிப்பறி
என ரமேஷ் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள். ஆனால் இரண்டில் மட்டுமே தண்டனை
வாங்கிக் கொடுத்தது போலீஸ். அதையும் அப்பீல் பண்ணிவிட்டுக் காத்திருக்கிறார் இந்த
முன்னால் ரௌடி.
திடீர் ஞானோதயம் பிறந்தவராய், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு
திருந்தி வாழ ஆசைப்பட்ட ரமேஷுக்கு, அதன்பிறகு ஆன்மீகவாதி, சமூக சேவகர், கவிஞர்,
எழுத்தாளர், அரசியல்வாதி எனப் பல முகங்கள்.
மதுரையில் அவ்வப்போது ரமேஷ் ஒட்டும் போஸ்டர்கள் பரபரப்பைக் கிளப்பும்.
வித்தியாசமான வாசகங்கள் அந்தச் சுவரொட்டிகளில் இருக்கும். 'இவருக்குள்ளா
இப்படிப்பட்ட சிந்தனைகள்!' என்று வியந்து அதைப் படிப்பவர்களைச் சிந்திக்க வைக்கும்.
சில சமயம் அரசியல் வாதிகளையும் நோகடிக்கும் அந்த போஸ்டர்கள்.
தற்போது பி.ஜே.பி.யில் இருக்கும் ரமேஷ், ரௌடியிஸத்தில் நுழைந்தது ஒரு
சுவாரஸ்யமான கதை!
ஜவுளி வியாபாரம் செய்துவந்த ரமேஷின் அண்ணனை மாமூல் கேட்டு வெட்டினார்
ஒரு ரௌடி. பிறகு அவரைப் பலி தீர்க்க முடிவெடுத்ததுதான் அவரது வன்முறை வாழ்க்கையின்
ஆரம்பம். அரிவாளைத் தூக்கும் முன்பாக முருகனுக்கு மாலை போட்டு விரதமிருந்து
வேண்டியிருக்கிறார் ரமேஷ். பிறகு அந்த எதிரியைப் பதினெட்டு இடங்களில் வெட்டிக் கூறு
போட, திகைத்துப்போன ரௌடிகள் வட்டாரம் ரமேஷைப் பாராட்டியிருக்கிறது.
ஆனால் ஜெயிலுக்குப் போன ரமேஷுக்குக் குடும்பத்திலிருந்து உதவி
கிடைக்கவில்லையாம். ரௌடிகளின் உலகமே அவருக்கு உதவியிருக்கிறது. இதனால் அவரது
வாழ்க்கையும் அதே பாதையில் பயணித்திருக்கிறது.
தனியாக ரமேஷ் கோஷ்டி உருவாகி விரிவடைந்தது. கூடவே பகையும் அதிகரித்தது. தங்கவேல்
கோஷ்டிக்கும் ரமேஷ் கோஷ்டிக்கும் தீராத பகை. ஒருவருக்கொருவர் பலி எடுப்பதையே
தொழிலாகக் கொண்டார்கள். இரண்டு தரப்பிலும் 23 உயிர்கள் பறிக்கப்பட்டதாகச் சொல்கிறார்
ரமேஷ்.
அரிவாளைத் தூக்கும் முன்பாக முருகனுக்கு மாலை போட்டு விரதமிருந்து
வேண்டியிருக்கிறார் ரமேஷ். பிறகு அந்த எதிரியைப் பதினெட்டு இடங்களில் வெட்டிக்
கூறுபோட, திகைத்துப்போனது ரௌடிகள் வட்டாரம்.
இந்த நிலையில் போலீஸ் தன் மீது மீண்டும் கை வைக்க, இப்போது
ஆடிப்போயிருக்கிறார் ரமேஷ். முப்பது வயது இளைஞரான ரமேஷை நாம் சந்தித்தபோது மூச்சு
விடாமல் மேடையில் முழங்குவதைப் போன்று வாரி இறைத்தார் வார்த்தைகளை.
"வன்முறைக்கு வன்முறை தீர்வாகாதுன்னு நான் முடிவெடுத்து ஐந்து
வருஷமாச்சு. திருந்தி வாழ ஆசைப்பட்டாலும் போலீஸ் விடுவதாயில்லை. இப்பக்கூட என்னைப்
பிடிச்சு 'வழிப்பறி கேஸ்' போட்டாங்க. 50 நாள் ஜெயில்ல இருந்துட்டு வந்தேன். இது பொய்
கேஸ். இதுமாதிரி பொய் வழக்குப் போடுறதை நாங்க 'சாமியார் கேஸ்'ன்னு சொல்லுவோம்.
என்மீது போடப்பட்ட வழக்குல ஒரு தடவை மட்டும்தான் போலீஸ் பிடிச்சிருக்கு. மற்ற
எல்லாத் தடவையும் நானே சரண்டாகியிருக்கிறேன். இப்பவும் இரண்டு வழக்கைத் தவிர, மற்ற
வழக்குகளில் எனக்கு விடுதலை கிடைச்சிருக்கு. 5 வருஷமா எந்தத் தப்பும் செய்யலை. ஆனா
போலீஸ் நான் திருந்திய மனிதனாக வாழக் கூடாதுன்னு நினைக்குது. கத்தி எடுத்தவன் கடைசி
வரை அதைக் கையில வச்சிருக்கணுமின்னு ஆசைப்படுது" என்றவர் சிறிது இடைவெளிவிட்டுத்
தொடர்கிறார்.
"ராஜாராம் மாதிரி என்னையும் தமிழ்த் தீவிரவாதின்னு முத்திரை குத்தி
போலீஸ்காரங்க தீர்த்துக் கட்டப் பார்த்தாங்க. சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது
அதைக் கண்டிச்சு போஸ்டர் ஒட்டினேன். அதுமாதிரி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நடத்தும்
ராமதாஸ், திருமாவளவன், சேதுராமன் ஆகியோருக்கு இந்த ஆண்டு தமிழக அரசு சிறந்த நடிகர்
விருது வழங்கணுமின்னு போஸ்டர்கள் போட்டேன். சதாம் உசேனை அமெரிக்க ராணுவம் கைது
செய்தபோது அதைக் கண்டித்ததோடு, அவரை விடுதலை செய்யணுமின்னும் கோரிக்கை வைத்தேன்.
ஏனென்றால் காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது என்று வெளிப்படையாகச் சொன்ன ஒரே
முஸ்லீம் தலைவர் சதாம்தான். இப்படி அடுக்கடுக்காக மக்களிடம் விழிப்புணர்ச்சி
ஏற்படுத்தி நான் வளர்ச்சியடைந்தது அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கவில்லை. இப்போது
அவர்களுடைய தூண்டுதலில்தான் போலீஸ் மீண்டும் எனக்கு நெருக்கடி கொடுக்க
ஆரம்பித்திருக்கிறது.
போலீஸ் நினைத்தால் எதுவும் செய்யலாம். இன்னும் சில பொய் வழக்குகள்
போட்டு என்னை மிசாவில் உள்ளே தள்ளலாம். என்கௌன்டர் செய்து உயிருக்கும் ஆபத்து
ஏற்படுத்தலாம்" என்கிறார் ரமேஷ்.
இலக்கியத்தின் மீது ஆர்வம் வைத்துள்ள ரமேஷ், கவிதைப் புத்தகம் எழுதி
வெளியிட்டுள்ளார். அதேபோன்று கட்டுரைகள் எழுதி அதையும் புத்தகமாக்கியிருக்கிறார்.
அதோடு இன்னும் மூன்று புத்தகங்களை எழுதி வெளியிடும் முடிவில் இருக்கிறார். இந்த
மூன்று புத்தகங்களில் அரசியல்வாதிகளைப் பற்றி ஒரு புத்தகத்தில் எழுத
முடிவெடுத்திருப்பதுதான் புயலைக் கிளப்பியிருக்கிறதாம். அந்தப் புத்தகத்திற்கு 'அரசியல்வாதிகளும்
அவர்களின் குற்றங்களும்' என்று தலைப்பு வைத்திருக்கிறார் ரமேஷ். |