| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

இன்றைய அரசியல்வாதிகளைவிட நான் ரொம்ப நல்லவன்!
மதுரை தாதா ரமேஷ் பேட்டி

திரு

குமுதம் ரிப்போர்ட்டர் 02.03.2006

ஒன்றல்ல... இரண்டல்ல... இவர் மீது இருபத்து நான்கு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள். மூன்று முறை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்டவர். ஒன்பதாண்டு காலம் சிறைவாசமிருந்தவர். அவர்... மதுரை தாதாக்களில் ஒருவரான பி.ஆர்.ரமேஷ் மானவர். அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலையாகி மூன்றாண்டுகளுக்கு முன்னர், பா.ஜ.க.வில் சேர்ந்த இவருக்கு அக்கட்சியில் மாவட்ட விவசாய அணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. திடீரென பா.ஜ.கவில் இருந்து விலகிய அவர், ஜார்ஜ் பெர்னாண்டஸின் ஐக்கிய ஜனதா தளத்தில் ஐக்கியமானார். சேர்ந்த அன்றே அவருக்கு, கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரமேஷைச் சந்தித்துப் பேசினோம்.

பா.ஜ.க.விலிருந்து ஏன் விலகினீர்கள்?

"பா.ஜ.க.விடம் நிலையான கொள்கை இல்லை. ஆட்சியில் இருந்தால் மிதவாதம் பேசுகின்றனர். இல்லையென்றால், மதவாதம் பேசுகின்றனர். விஜயகாந்த், கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டு வைக்கும் என இல.கணேசன் சொன்னார். ஆனால் விஜயகாந்தோ, 'நான் தனியாகப் போட்டியிடப் போகிறேன்ஒனு சொல்லிட்டார். 'இப்படித் தேடிப்போய் அவமானப்படுவது தேவையா?' என இதுவரை யாரும் கேட்கவில்லை.

திருநாவுக்கரசரை மாநிலத் தலைவராகப் போட்டிருந்ததால், கட்சி தமிழ்நாட்டில் உருப்பட்டிருக்கும். அதையும் செய்யலை. காரணம் கோஷ்டிப் பூசல். மதுரையில் பா.ஜ.க. வளர்ச்சிக்கான அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டேன். ஆனாலும் அவங்களுக்கு என்னைப் பிடிக்கலை. ஏன்னா, கட்சி வி.ஐ.பி. யாராவது வந்தால்... அவரை வரவேற்று 'வருக... வருக...' என போஸ்டர் ஒட்டணும்னு அவங்க எதிர்பார்க்கிறாங்க. இதுல எனக்கு உடன் பாடில்லை 'கட்சி வேலை சொல்லு, செய்யுறேன். இந்தத் துதிபாடற வேலையெல்லாம் என்னால முடியாது'ன்னுட்டேன். இதனால் என்னை அவங்களுக்குப் பிடிக்காம போச்சு. ஏதாவது வன்முறை வரும்போது, அதில் என்னை 'உள்ளே' அனுப்பிட்டு, மதுரையில் கட்சியை வளர்த்துக்கிடலாம்னு நினைச்சாங்க. பச்சையா சொல்லணும்னா... ஏதாவது முஸ்லிமை யாராவது கொன்னுட்டாக் கூட, அந்தப் பழி என் மீது விழும் சூழ்நிலைதான் அங்க இருந்திச்சு. இவங்க கட்சி வளர்க்க நான் தியாகி ஆகணுமான்னு யோசித்தேன். நான் சமீபத்தில் ஜெயிலுக்குப் போனபோது அங்கிருந்த இஸ்லாமியச் சகோதரர்களும் இந்தக் கேள்வியை எழுப்பினாங்க. நமக்கும் பயன்படாத நாட்டுக்கும் பயன்படாத பா.ஜ.கவிலிருந்து விலகிட்டேன்."

சமீபத்தில்கூட நீங்க பா.ஜ.க.வினரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறதே?

"தகராறு ஒண்ணும் கிடையாது. நான் பா.ஜ.கவிலிருந்து விலகி நாலு மாசமாச்சு. ஆனால், நான் விலகினதா அறிவிக்க மாட்டேங்கிறாங்க. எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவங்க கேட்கலை. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைச்சேன். சில தினங்களுக்கு முன்னாடி, மதுரை அண்ணாநகரில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டத்துக்கு பா.ஜ.க.காரங்க ஏற்பாடு செய்திருந்தாங்க. அவங்ககிட்ட போய் 'நான் கட்சியை விட்டு விலகினதா அறிவியுங்க. அல்லது இதுவரை நான் கட்சிக்கு செலவு செய்த பணத்தைத் திரும்பக் கொடுங்க'-ன்னு கேட்டேன். உடனே அவங்க, கூட்டத்தை வண்டியூர் பகுதிக்கு மாத்திட்டாங்க. இனி இவங்ககிட்ட எதுக்கு வம்புன்னு, ஜார்ஜ் பெர்னாண்டஸின் ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்துட்டேன்".

இந்தக் கட்சியில் சேர்ந்தவுடன் உங்களுக்கு பொறுப்புக் கொடுத்துள்ளார்களே... அவர்களுக்கு உங்களின் முன்னாள் வாழ்க்கை தெரியுமா?

(கொஞ்சம் கோபமாக) "ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஒரு முன்னால் வாழ்க்கை இருக்கும். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் முதல்வர் ஆவதற்கு முன்பு, சினிமாவில் இருந்தவர்கள்தான். அதற்காக, இப்போது நடிகை ஜெயலலிதான்னு சொல்ல முடியுமா? நான் பா.ஜ.க.வில் சேர்ந்தபோது, என்னைப் பற்றி இல.கணேசனிடம் சிலர் சொன்னார்கள். அதற்கு அவர் 'முன்னாடி எப்படி இருந்தாலும் பரவாயில்லை. நம்ம இயக்கத்துக்கு வந்த பிறகு சரியாக இருந்தால் சரிதான்' என்று, என் முன்னாடியே சொன்னார். இப்போதுகூட என்னைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொண்ட பிறகுதான், ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்த மாநில அளவிலான பொறுப்பை எனக்குத் தந்திருக்கார்."

இப்படி கட்சியில் சேருவது... பொறுப்புகளை வாங்குவது எல்லாம், நீங்கள் உங்கள் பாதுகாப்புக்காகத்தான் செய்கிறீர்கள் எனத் தோன்றுகிறதே...?

"பொதுவா எல்லோரும் பேசறதுதான் இது. பா.ஜ.க.வில் இருந்தபோது எனக்கு என்ன பாதுகாப்பு இருந்தது? எனக்கு நான்தான் பாதுகாப்பு. தென்மாவட்டம் முழுவதும் எனக்கு பரிச்சயம்தான். மதுரை ஜெயிலிலேயே ஐநூறு பேரை நான் சொல்வதுபோல் கேட்க வைத்திருந்த எனக்கு, எந்த அரசியல் கட்சியும் பாதுகாப்புத் தரவேண்டிய அவசியமில்லை. அதற்காக, அவர்கள் பின்னால் நான் செல்லவும் மாட்டேன்"

எப்படிக் கட்சியை வளர்க்கலாம் என உத்தேசித்திருக்கிறீர்கள்...?

"முதல்கட்டமாக சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், வரும் ஆறு மாதங்களுக்குள் இளைஞர்களை மிகப்பெரிய அளவில் கட்சியில் சேர்க்கலாம்னு இருக்கேன். அதற்கு முன்பாக, ஜார்ஜ் பெர்னாண்டஸைச் சந்திக்கப் போறேன். மார்ச் மாதம் பகத்சிங் நினைவுநாள் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறேன். அந்த நிகழ்ச்சியைத் தமிழகமே திரும்பிப் பார்க்கிற மாதிரி நடத்தப்போறேன்".

தேர்தலில் நிற்கும் ஐடியா உள்ளதா?

"அப்படியெல்லாம் இல்லீங்க. எங்க கட்சி எதாவது கூட்டணிக் கட்சியோடு தேர்தல் உறவு வைத்துக் கொள்ளும்னு சொல்றாங்க. தேர்தல் நேரத்தில் என் பணி எதிரணியை உறுத்துவதாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். என் தேவையை, நாங்கள் இருக்கிற கூட்டணிக் கட்சியால் தவிர்க்க முடியாத நிலை வரும்".

என்னதான் கட்சியில் பொறுப்பு வகித்தாலும் கூட, உங்களை ஒரு தாதாவாகத்தானே மதுரை பார்க்கிறது?

"அப்படின்னு நீங்களே சொல்லிக்கிடறதா? மதுரையில் கருத்துக்கணிப்பு நடத்திப் பாருங்க. என்னை மோசமானவன் என யாரும் சொல்லமாட்டார்கள். மூன்றாண்டுகள் மக்களுக்காக நேரடியாகக் களத்திலிறங்கி பாடுபட்டிருக்கிறேன். இன்றைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டால், நான் நூறு சதவிகிதம் நல்லவன்."

மக்கள் பார்ப்பது இருக்கட்டும். போலீஸ் பார்வையில் நீங்கள் எப்படி?

"எனக்கு இப்போது எந்த போலீஸ் தொந்தரவும் இல்லை. இனி, அரசியல்வாதிகளின் தொந்தரவு தான் ஏற்படப்போகிறது. இதுவரை மூன்று புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கிறேன்!' அரசியல்வாதிகளும் அவர்களது குற்றங்களும்' என்ற புத்தகத்தை இன்னும் ஆறு மாதங்களில் வெளியிடப்போகிறேன். நான் பழகிய பல்வேறு தலைவர்களைப் பற்றி அதில் விலாவாரியாகச் சொல்லப் போகிறேன்.

நான் தாதாவாக இருந்தவன்தான். ஆனால், என்னால் எந்த அப்பாவியும் பாதிக்கப்பட்டதில்லை. என்னை எதிர்த்தவனிடம் நான் சண்டைக்குப் போயிருக்கலாம். அது மனித இயல்பு. அதேநேரத்தில் நல்லவர்கள் போல, மடிப்புக்கலையாத வெள்ளை வேட்டி சட்டைக்குள் இருந்துகொண்டு கள்ளக்காதல் செய்பவர்களையும், கட்சிக்காரண கட்சி வேலையைத் தவிர அனைத்துக்கும் பயன்படுத்துபவர்களையும், சொந்தக் கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களையும், 'கல்யாணம் ஆகவில்லை' எனச் சொல்லிக்கொண்டே குழந்தை பெற்றுக் கொண்டவர்களையும் என்ன சொல்லி அழைப்பீர்கள்? இப்படிப்பட்ட சில அரசியல்வாதிகளைப் பற்றிய தகவல்கள், அந்தப் புத்தகத்தில் ஆதாரத்துடன் இருக்கும். அந்தப் புத்தகம் வந்தால் 'சே... நாம் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் இப்படியா? என மக்கள் காறித் துப்புவார்கள். அந்தத் தலைவர்களால் என் உயிருக்கு ஆபத்து வரலாம். சொத்து, சுகம், கல்யாணம், காட்சி எதுவும் வேண்டாம்னு இருந்துட்டேன். அதுனால எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வாழும் காலத்தில் மக்கள் மனதில் பதியறது மாதிரி ஏதாவது செய்துட்டுப் போவோமே.. என்ற முடிவோடு இருக்கேன்' என்றெல்லாம் தத்துவார்த்தமாகப் பேசினார் ரமேஷ்..

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution