| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

"என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் என் பெயரும் இருக்கிறது!"
மதுரை பா.ஜ.க. பிரமுகர் பேட்டி

பதி
படங்கள்: சார்லஸ்

குமுதம் ரிப்போர்ட்டர், 19.10.2003

கடந்த ஆண்டு வரை மதுரை தாதாக்களில் ஒருவராகச் சித்திரிக்கப்பட்டு இன்றைக்கும் போலீஸாருக்குப் பயந்து ஏறக்குறைய தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர் மதுரை அண்ணா நகர் ரமேஷ். திடீரென பா.ஜ.கவின் மதுரை மாவட்ட விவசாய அணிச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் இவர். உள்ளூர் பா.ஜ.க கட்சிக்காரர்களுக்கு இது அதிர்ச்சியை அளித்துள்ளது.

போலீஸ் ரிக்கார்ட்படி இருபத்து நான்கு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் அவரது பெயர் இடம் பெற்றிருந்ததால், மூன்று முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதானவர். அவரைச் சுட்டுப்பிடிக்க மூன்று முறை போலீஸ் உத்தரவிட்டதாம். பதினான்கு ஆண்டுகளாகப் போலீஸாரால் தேடப்பட்ட பின்னரும் ஒரே ஒரு முறைதான் போலீஸாரிடம் சிக்கியுள்ளாராம். இப்படி ஏராளமான 'க்ரைம் பாராக்கிரமங்களை' உடைய ரமேஷ் மீதான வழக்குகள் அனைத்தும் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தன என்றாலும் எப்போது வேண்டுமானாலும் போலீஸார் தன்னைச் சுடுவார்கள் என்ற அச்சத்துடனேயே இருக்கிறார். இப்படிப்பட்ட இவருக்கு 'திடீர் பதவி கிடைத்தது எப்படி...?' ரமேஷை பெரும் முயற்சிக்குப் பின்னர் சந்தித்தோம். காவி வேஷ்டி... காவிச்சட்டை கழுத்தில் ருத்திராட்ச மாலை... நெற்றி நிறைய விபூதி, அதில் குங்குமம்... லேசான தாடி என வித்தியாசமான காஸ்டியூமில் இருந்தார் ரமேஷ்.

இந்த ஒராண்டு காலத்தில் புதிதாக உங்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லையா?

"ஜாதி, மத வெறியர்களுக்கு எதிரான போராட்டம் ஒன்றை அறிவித்தேன். அதில் யார் பெயரையும் நான் குறிப்பிடவில்லை. அந்தப் போராட்டத்தில் ஜாதி, மத வெறியைக் கொடும்பாவியாகக் கட்டி எரித்தேன். அதற்காகப் போலீஸார் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். வழக்கமாக இதுபோன்ற வழக்குகளுக்கு ஐம்பது ரூபாய் ஃபைன் போடுவதோடு சரி. ஆனால் எரித்தது நான் என்பதால் என்னைச் சிறையில் போட்டனர். அதுமட்டுமில்லாமல், இந்திய இறையாண்மைக்கு நான் குந்தகம் விளைவித்ததாகவும் நான் எரித்த கொடும்பாவியை போலீஸார் கவனிக்காமல் விட்டிருந்தால் அது பக்கத்திலுள்ள குடிசைகளில் தீப்பிடித்திருக்கும் என்றும் போலீஸார் வழக்கை ஜோடித்திருந்தார்கள். குடிசைகளே இல்லாத பகுதியில்தான் நான் எரித்தேன்.

வழக்கு விசாரணையின் போதும் என்னை 'தாதா' என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அதற்கு எனது வக்கீல், 'ரமேஷ் தாதாவாக இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது திருந்தி வாழ்கிறார்' என்றார். மேலும் அந்தக் கொடும்பாவி எரிப்புத் தொடர்பாக நான் வெளியிட்டிருந்த நோட்டீஸையும் நீதிபதியிடம் அளித்தேன். அதில் அனைவரும் ஒன்று அதுவே நன்று... ஆன்மிகம் மருந்து அது ஆன்மாவுக்கு விருந்து' என தேசபக்தியையும் ஆன்மிகத்தையும் விளக்கியிருந்தேன். அதைப் படித்த நீதிபதி, என்னை நிபந்தனை ஜாமீனில் வெளியே விட்டார்.

மதுரை மதிச்சியம் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் வெளியே விடப்பட்ட நான், தினமும் அந்த ஸ்டேஷன் சென்று கையெழுத்திட்டேன். அப்போதெல்லாம் போலீஸார் என்னை மிரட்டினார்கள். 'என்கவுன்ட்டருக்குத் தயாராக இரு.' என்றார்கள். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலிருந்தும் 'என் ஏரியா பக்கம் வந்துவிடாதே' எனச் சொல்லிச் சென்றார்கள். அதையெல்லாம் கேட்க எனக்கு வேதனையாக இருந்தது."

போலீஸாருக்கு உங்கள் மீது அப்படியென்ன கோபம்?

"கொடும்பாவி எரிப்புத் தொடர்பாக நான் அடித்த நோட்டீஸுகளை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விநியோகிக்க ஏற்பாடு செய்தேன். அதைப் பார்த்த போலீஸார், அந்தச் சிறுவர்களையும் இளைஞர்களையும் கைது செய்து மிரட்டினார்கள். அதைக் கண்டித்து, 'அன்றும் கொடுமை இன்றும் கொடுமை. நல்லது செய்தால் விட்டுவிடு. கெட்டது செய்தால் சுட்டுவிடு' என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டினேன். இது போலீஸாருக்குப் பலத்த எரிச்சலை ஏற்படுத்தியது. அதன் பின்னர் என்னை ஏதாவது வழக்கில் சிக்கவைக்க வேண்டும் எனக் காத்திருந்தார்கள். அதற்காகச் சில இளைஞர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு 'உங்களைப் பிடிக்கும்படி ரமேஷ்தான் எங்களிடம் சொன்னார்' என்றது போலீஸ். அதாவது, அந்த இளைஞர்களுக்கு என் மீது விரோதம் ஏற்பட்டு - அவர்கள் மூலமாக என்னைப் போட்டுத்தள்ள (கொலை செய்ய) போலீஸ் திட்டமிட்டிருக்கிறது.

முன்னாடியெல்லாம் என்னைப் பார்த்து சிலர் பயந்தது வாஸ்தவம். ஆனால் இன்றைக்கு எனக்கு மிரட்டல் போன்கள் வருகின்றன. 'உன்னைக் கொலை செய்துவிடுவோம்.' என போனில் பேசியவர்கள் மிரட்டினார்கள். ஒருகட்டத்தில், 'நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன். உன்னைக் கொல்லப் போகிறோம்' என்றும் சொன்னார்கள். நான் அந்தப் போன் நம்பர்களோடு இன்ஸ்பெக்டரைப் போய் பார்த்தேன். நடந்ததை அவரிடம் சொன்னேன். தான் அப்படியெல்லாம் பேசவில்லை என்று சொன்ன அவர்... 'நீ நாட்டில் இருந்து என்ன செய்யப்போற? உன்னைச் சுடத்தான் போறோம். ஆனால், அதை சொல்லிட்டா செய்வோம்..." என்றார்.

நீங்கள் திருந்திவிட்டதாகச் சொல்கிறீர்களா?

"உங்களுக்கு வரும் சந்தேகம்தான் போலீஸுக்கும் வருகிறது. என்னைப் பார்த்த' ஒரு போலீஸ் அதிகாரி, 'உன் மேல் உள்ள அழுக்கு எப்படி மாறும்?'னு சொன்னார். அதற்கு, 'நான் குளிச்சு ரொம்ப நாளாச்சு'ன்னு சொன்னேன்.
கொடும்பாவி எரித்ததைத் தவிர, வேறு எந்த வழக்கும் இப்போது என்மீது கிடையாது. இந்த நிலையில், இப்பவும் ஏறக்குறைய தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்கிறேன். நிரந்தரமாக எங்கும் தங்கமுடியவில்லை. ஓரிடத்தில் தங்கி சாப்பிட முடியவில்லை. நாடோ டியாகத் திரிகிறேன். மக்கள் என்னைப் புரிந்துகொண்ட அளவு நீங்களோ (பத்திரிகையாளர்கள்). போலீஸோ புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் என் வருத்தம்."

இப்படி போலீஸுக்குப் பயந்ததால் தான் உங்கள் பாதுகாப்புக்காகக் கட்சியில் சேர்ந்தீர்களா?

(ஒரு வினாடி ஷாக்கானார்). "முழுக்க முழுக்க அப்படிச் சொல்ல முடியாது. என் சமூகப் பணியைத் தடையின்றி அங்கீகாரத்துடன் செய்யவும் அத்துடன் பாதுகாப்புக்காகவும் கட்சியில் சேர்ந்தேன் என்றும் சொல்லலாம்."

அதற்கு பாரதிய ஜனதா கட்சியைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன...?

"என்னைப் பல்வேறு கட்சிகள், தங்கள் இயக்கத்துக்கு வருமாறு கூப்பிட்டன. குறிப்பாக ம.தி.மு.க. சார்பில் அழைப்பு வந்ததோடு, பதவியும் தருவதாகச் சொன்னார்கள். அதில் சேர்ந்திருந்தால் என்னை ஏதோ தமிழ் தீவிரவாதியாகச் சித்திரித்து பொடாவில் போட்டிருப்பார்கள். தி.மு.க.- அ.தி.மு.கவில் சேர்ந்து செலவு செய்யும் அளவு எனக்கு வசதியில்லை. காங்கிரஸில் இருக்கிற கோஷ்டியில் ஒரு கோஷ்டியாகி காணாமல் போகவும் நான் விரும்பவில்லை.

நான் ஆன்மிகத்தில் நம்பிக்கையுடையவன். தேசியத்திலும் தெய்வீகத்திலும் நம்பிக்கையுடையவர்கள் பிரதமர் வாஜ்பாயும் அத்வானியும். அதனால் அவர்கள் தலைமையை ஏற்பது என பா.ஜ.க.வில் சேர்ந்தேன்."

பா.ஜ.க.வில் சேர்ந்தது அவ்வளவு எளிதாக இருந்ததா?

"இல்லை. சிரமமாகத்தான் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் தீவிர உறுப்பினராகச் சேர்ந்தேன். அதன்பிறகு பொதுச்செயலாளர் கர்மயோகி இல. கணேசன் (அவர் பெயரை உச்சரிக்கும்போது மிக மரியாதையாக மெல்லிய குரலில் சொல்கிறார்) முன்னிலையில் சிதம்பரத்தில் வைத்து கட்சியில் சேர்ந்தேன்."

கட்சியில் எப்படி உங்களுக்குப் பொறுப்பு தந்தார்கள்?

"கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளராக காமாட்சி என்பவர் இருக்கிறார். அவரிடம் நான் மதுரை மாவட்ட கிராமங்களில் நிலவும் வறுமை, அதையடுத்து ஒரு சில இடங்களில் எலிக்கறி சாப்பிடுவதையும் அங்குச் சென்று நான் செய்த உதவிகளையும் சொன்னேன். அதையடுத்து, என்னை இந்த மாதம் மூன்றாம் தேதி மதுரை மாவட்ட விவசாய அணிச்செயலாளராக நியமித்தார்".

அரசியல் கட்சியில் சேர்ந்த பிறகும் போலீஸ் பிரச்னையா?

"அதையேன் கேட்கிறீங்க... அரசியல்கட்சி மேடையில் நான் இருக்க.. பாதுகாப்பிற்குக் கீழே போலீஸ் நிற்கிறது. நான் மேடையில் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 'ரவுடியாகக்கூட இருந்துகொள். அரசியலிலெல்லாம் இருக்கக் கூடாது' என்கிறது போலீஸ்.

இப்போது என்னை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். மதுரையில் என்னைத் தெரியாதவர்களே இல்லை என்றுகூடச் சொல்லலாம். அந்த நிலையில் என்மீது ஏதாவது இரண்டு மூன்று வழக்குப் போட்டு என் பெயரை மக்கள் மத்தியில் கெடுத்து, என்கவுன்ட்டர் பண்ணணும்னு போலீஸ் முடிவு செஞ்சுட்டாங்க. என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் சென்னை, திருநெல்வேலி (வீரமணி, வெங்கடேச பண்ணையார்) முடிஞ்சு போச்சு. இனி மதுரைதான் பாக்கி. அது நான்தான்".

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution