ஆனந்த விகடன் 15.6.03
பெரிய ரௌடியாக மதுரையையே கலக்கிக்கொண்டிருந்தவர் 'அண்ணாநகர்' ரமேஷ்.
இன்று அவரே மக்கள் வியந்து பாராட்டும் சமூக சேவகராக மாறியிருக்கிறார்!
கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்...
ஆறாங்கிளாஸுக்குமேல்
படிப்பு ஏறாமல் போனதால் மதுரை அண்ணாநகர் பகுதியில் ஊதாரியாகச்
சுற்றிக்கொண்டிருந்தவர் ரமேஷ். ரமேஷின் அண்ணன் ராஜேந்திரன் இளநீர் வியாபாரி.
திடீரென ஒருநாள், ரமேஷின் நண்பர்கள் ஓடிவந்து "உங்க அண்ணனுக்கும்
கணபதிக்கும் பெரிய சண்டைடா" என்று படபடக்க.. "அண்ணனை அடித்தவனைச் சும்மா விடமாட்டேன்"
என்று ஆத்திரத்தோடு ஓடினார் ரமேஷ். இளநீர்க் கடையில் இவரது அண்ணனைக் கணபதி
முரட்டுத்தனமாகத் தாக்கிக் கொண்டிருந்த வேளையில் குறுக்கே பாய்ந்த ரமேஷ் இளநீர் சீவ
வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆத்திரத்துடன் கணபதியின் உடம்பில் பதினெட்டு இடங்களில்
பாய்ச்சிவிட்டுத் தப்பி ஓடினார். இந்தச் சம்பவத்தில் கணபதி உயிர்பிழைத்து விட்டாலும்
ரமேஷ்மீது கொலைமுயற்சி வழக்குப் போட்டு அவரைத் தேடிப் பிடித்து ஜெயிலுக்கு
அனுப்பியது போலீஸ்.
ஜெயிலுக்குள் நுழைந்த ரமேஷை அங்கிருந்த சூழ்நிலை பக்கா ரௌடியாக
மாற்றிவிட்டது. உள்ளே 'மரக்கடை' முருகன், 'கரடி' ஆறுமுகம், 'கரும்பாலை' இளங்கோ, 'கோல்சா'
கௌதம் எனப் பிரபலமான ரௌடிகளுக்கெல்லாம் உயிர்த்தோழனாக மாறிப்போன ரமேஷைச்
சிறையிலிருந்து வெளியில் அனுப்பிய கையோடு அவர் பெயரை 'அண்ணாநகர்' ரமேஷ் என அடைமொழி
கொடுத்து ரௌடி லிஸ்ட்டில் சேர்த்து விட்டது போலீஸ்.
லேசான தாடி, தலையில் நேர் வகிடு, நெற்றியில் அரக்கு குங்குமக்கோடு...
இவைதான் ரமேஷின் அடையாளம். எந்த நேரமும் இடுப்பைச் சுற்றி வெடிகுண்டுகள், துப்பாக்கி
என மினி ஆயுதக்கிடங்கோடு அலைவதுதான் ரமேஷின் ஸ்டைல்.
இந்தச் சூழ்நிலையில், பெயிலில் வெளி வந்த 'மரக்கடை' முருகனை அவனது
எதிர் கோஷ்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவன் போட்டுத் தள்ளிவிட, தனது உயிர் தோழன்
துள்ளத்துடிக்கக் கொல்லப்பட்டதைச் சகித்துக்கொள்ள முடியாத ரமேஷ் சீறி எழுந்து,
தங்கவேல் கோஷ்டியைச் சேர்ந்த 'அட்டாக்' முத்து என்பவனை பழிக்குப் பழியாகப் போட்டுத்
தள்ளிவிட்டார். இதுதான் ரமேஷ் செய்த முதல் கொலை.
இதன்
தொடர்ச்சியாகப் பதிலுக்குப் பதில் நடத்தப்பட்ட கொலைகளில் தங்கவேல் தரப்பில் பத்துப்
பேரும், ரமேஷ் தரப்பில் ஒன்பது பேரும் சுடுகாடு போனார்கள். இந்தச் சம்பவங்கள்
தொடர்பாக ரமேஷ் மீது இருபத்துநான்கு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதற்காக ஒன்பது
வருடங்கள் சிறையிலிருந்தார் ரமேஷ். ஆனால், கடைசியில் விடுதலை பெற்று கடந்த ஆறு
மாதங்களுக்கு முன் வெளியில் வந்துவிட்டார் ரமேஷ்.
ரௌடியாக உள்ளே போன ரமேஷ், இந்த முறை சமூக சிந்தனை உள்ளவராக வெளியில்
வந்ததுதான் இதில் சுவாரஸ்யமான திருப்பம்.
சிறையிலிருந்து வெளியில் வந்ததுமே, "ரௌடியிஸத்தை விட்டுவிட்டு
ஜனநாயகப் பாதையில் வாழ விரும்புகிறேன்" என்று கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு
மனுக் கொடுத்திருக்கிறார்.
சிறைக்குள் இருக்கும்போதே புரட்சிகரமான கவிதைகளை எழுதி வைத்திருந்த
ரமேஷ் வெளியில் வந்ததும் 'பாலைவனத்தில் நெற்கதிர்கள்' என்ற தலைப்பில் அவற்றையெல்லாம்
தொகுத்து நூலாக்கினார்.
மதுரை வி.ஐ.பி.க்கள் முன்னிலையில் அந்தக் கவிதை நூலை வெளியிட்டார்
ரமேஷ். நூல் விற்ற பணத்திலிருந்து பத்தாயிரத்து நூற்றியொரு ரூபாயை திண்டுக்கல்லைச்
சேர்ந்த கனகசபை என்கிற ஏழை மாணவனின் மேற்படிப்புச் செலவுக்காகத் தந்து தனக்குள்ளும்
மனிதநேயம் உண்டு என்பதை வெளியுலகத்துக்குக் காட்டினார்.
தொடர்ந்து
சமூகசேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே 'வைகை ஸ்ரீ மீனாட்சி ரிசர்ச் ஃபவுண்டேஷன்'
என்கிற தொண்டு நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார் ரமேஷ்.
சிவகங்கை அருகே அழகாபுரி கிராமத்தில வறட்சியைச் சமாளிக்க முடியாமல்
அங்குள்ள மக்கள் எலிக்கறி சாப்பிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் தனது
நண்பர்களோடு அழகாபுரிக்கு விரைந்த ரமேஷ் ஒவ்வொரு வீட்டுக்கும் இருபத்தைந்து கிலோ
அரிசியும் ஐம்பது ரூபாயும் கொடுத்து அசத்தினார்.
தமிழ் மீதும் இந்திய ராணுவத்தின் மீதும் பற்றுதல் வைத்திருக்கும்
ரமேஷ் ஒவ்வொரு வருடமும் இந்திய ராணுவத்துக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி
போஸ்டர் ஒட்ட மறப்பதில்லை. சமீபத்தில் மதுரை, அண்ணா நகரில் இவர் வைத்த தமிழன்னை
சிலையை மாநகராட்சி அப்புறப்படுத்திவிட்டது. இதைக் கண்டித்து ஆட்களைத் திரட்டி
உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த ரமேஷ் கடைசியில் சற்று வித்தியாசமாகச்
சிந்தித்து, உண்ணாவிரதத்துக்குப் பதிலாக மூவாயிரம் பேருக்கு வடை - பாயாசத்துடன்
அன்னதானம் போட்டு அசத்தினார்.
"என்னைப்போல சேட்டைக்காரங்க உருவாவதற்கு முக்கியக் காரணமே வீட்ல
இருக்குறவங்களோட அன்பும், பாசமும் கிடைக்காமல் போவதுதான்.
'வன்முறை வெற்றி நிலைக்காது. ஜனநாயக வெற்றிதான் பேர் சொல்லும்'னு
லேட்டாத்தான் புரிஞ்சுக்கிட்டேன். என்னை ரத்தவெறி பிடிச்ச மிருகமா பார்த்துப் பயந்து
ஒதுங்கிப் போய்க்கிட்டிருந்த ஜனங்கள் இப்ப முகம் கொடுத்து அன்பா பேசிப் பழகறாங்க.
ஆனா, இப்பவும் நான் எதிரிகளுக்குப் பயந்து நித்தம் ஒரு எடமாதான்
தூங்கி எழுந்திருச்சுகிட்டிருக்கேன். என்னுடைய நாட்கள் எண்ணப்படுதுனு எனக்கு நல்லாவே
தெரியுது. சாகுறதைப் பத்தி நான் கவலைப்படலே. ஆனா, உசிரோட இருக்கிறவரைக்கும்
மக்களுக்கு உபயோகமானவனா இருந்துட்டுப் போகணும். இதுதான் என் ஆசை!" என்கிறார் ரமேஷ்
நெகிழ்ச்சியாக.
"முன்னெல்லாம்
அரைமணி நேரத்துல பத்தாயிரம் ரூபாய் வரணும்... இல்லேன்னா மூணுநாளைக்குள்ள உன்னைக்
க்ளோஸ் பண்ணிருவேன்'னு ஒரே ஒரு போன் போட்டா போதும். பத்தாயிரம் ரூபாய் பணத்தை
உடனடியா கொண்டாந்து கொடுத்துருவாங்க. ஆனா இப்ப. 'அன்னதானம் பண்ணணும். உங்களால
முடிஞ்ச நிதி உதவி பண்ணுங்க' ஒவ்வொரு கடைவாசலா ஏறிப்போய் கெஞ்சிக் கேட்டாக்கூட
குடுக்க மாட்டேங்கறாங்க. இதை நெனச்சாத்தான் 'நல்லதுக்கே
காலம் இல்லைப்பா'னு தோணுது" என்ற ரமேஷ்.
"நான் இப்ப கத்தியைக் கீழே போட்டுட்டாலும் போலீஸும் எதிரிகளும் என்னை
விடமாட்டேங்குறாங்க. போன வாரம்கூட எதிர் கோஷ்டியைச் சேர்ந்த இருபது பேர் இந்த
ஏரியாவுக்குள்ள வந்து என்னைத் தேடிட்டுப் போயிருக்காங்க. போலீஸ் என்னடானா எங்கே கொலை
நடந்தாலும் எனக்கு போன் போடுறாங்க. தா. கிருட்டிணன் கொலை சம்பந்தமாகூட என்கிட்ட
விசாரிச்சாங்க. இதனாலதான் திருந்தி வாழ நினைக்கிறவங்ககூட திருந்த முடியாம
தவிக்கிறாங்க. மதுரையைப் பொறுத்த வரைக்கும் என்னைப் போல் நிறைய ரௌடிகள் திருந்தி
வாழணும்கிற முடிவுக்கு வந்திருக்காங்க. இந்த வாழ்க்கையில நான் ஜெயிச்சுக்
காட்டிட்டேன்னா, அவங்க எல்லாரும் 'மளமள'னு ஆயுதங்களைக் கீழே போட்டுடுவாங்க. இது
சத்தியம். இது நடக்கும்!" என்றார் உறுதியுடன். |