| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

"நான் செத்தா... அதுக்குப் போலீஸ்தான் பொறுப்பு!"
மதுரை தாதா பரபரப்புப் பேட்டி!

ப. திருமலை

குமுதம் ரிப்போர்ட்டர், 10-11-2002

"நான் அண்ணாநகர் ரமேஷ் பேசறேன். என் மீதான எல்லா வழக்குகளும் முடிஞ்சு, தண்டனை அனுபவிச்சிட்டு ஜெயில்ல இருந்து வந்துட்டேன். இனி நல்லவனாக இருக்க விரும்புறேன். ஆனா, போலீஸ் என்னை நல்லவனா இருக்க விடமாட்டேங்கிறாங்க. என்னச் சுட்டுக் கொல்ல முயற்சிக்கிறாங்க. அதனால தலைமறைவா இருக்கிறேன். உங்ககிட்ட கொஞ்சம் பேச விரும்புகிறேன் வரமுடியுமா?" - அதிகாலையில் நமக்கு வந்த இந்த டெலிபோன் அழைப்பு, நமது அரைகுறைத் தூக்கத்தையும் அடியோடு விரட்ட - ரமேஷை சந்திக்கக் கிளம்பினோம்.

மதுரையின் மிகப்பெரிய ரவுடிக்கும்பலின் தலைவனாகச் சித்திரிக்கப்படுபவர் அண்ணாநகர் ரமேஷ் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் மூன்று முறை கைதானவர். கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு என இவர் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. மொத்தத்தில் சுமார் ஒன்பது ஆண்டுகள் ஜெயிலில் இருந்தவர். இவருக்கும், இவரது எதிர்கோஷ்டிக்கும் இடையே தொடர்ந்து நடந்து வந்த மோதலில் இருதரப்பிலும் சேர்த்து, கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட உயிரிழப்பு இருபத்திமூன்று!

மதுரை, சென்னை, சேலம் ஆகிய ஜெயில்களில் இருந்தவர். மதுரை ஜெயிலில் இருந்தபோதும்கூட அங்குத் தனக்கெனத் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கொண்டு, நூற்றுக்கணக்கான கைதிகளின் ஆதரவுடன் இருந்தவர். ஜெயிலுக்குள் இருந்தாலும், இவரது இன்ஸ்ட்ரக்ஷன்படி வெளியே அனைத்து வேலைகளும் கச்சிதமாக நடந்துகொண்டுதான் இருந்தன. காவிரிப் பிரச்சினையானாலும் சரி, வக்கீல் போராட்டமானாலும் சரி... அது தொடர்பான இவரது கருத்துக்கள் அவ்வப்போது மதுரை நகரில் போஸ்டர்களாக ஒட்டப்படும்.

இவரது செல்வாக்கைச்(?) சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சுமார் ஐம்பது பேர் தங்கள் கையில் பி.ஆர். எனப் பச்சை குத்தியுள்ளார்கள்.
பி. ரமேஷ் என்பதன் சுருக்கமே அது!

அவர் சொன்ன இடத்துக்குச் சென்றோம். சில இளைஞர்கள் இருந்தார்கள். விசாரித்தார்கள். சில நிமிடங்களில் ரமேஷ் வந்தார். வேலையில்லாத பட்டதாரி போன்ற தோற்றம். பளீர் வெள்ளை முழுக்கைச் சட்டையை மடித்துவிட்டிருந்தார். நெற்றியில் சந்தனக் கீற்று. அதன் நடுவில் குங்குமம். பாக்கெட்டில் செல்போன்.

அவரது கைகள், மார்பு என உடலின் பல இடங்களில் பெயர்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன. கேட்டோ ம். இந்தப் பெயரெல்லாம் என் கோஷ்டியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இவர்களெல்லாம் எதிர்கோஷ்டியினரால் கொல்லப்பட்டவர்கள்" என்று அவர் சொன்னதும் ஷாக்.

இனி அவரது பேட்டி...

அடிதடியில் எப்படி இறங்கினீர்கள்?

"நான் ரஜினி ரசிகன். 1989-இல் 'வேலைக்காரன்' படம் வந்தபோது, பேனர் வைக்கறதில ஒரு கட்சிக்காரர் எங்கிட்ட தகராறு செஞ்சார். வெட்டிட்டேன். ஆனா, அவர் சாகலை. அடுத்து என் அண்ணன் நடத்தி வந்த இளநீர்க் கடையில் தகராறு செய்த ஒருத்தரைத் தாக்கினேன். அதில் இருந்து போலீஸ் பார்வை என் மேல விழுந்துடுச்சு."

உங்கள் தலைமையில் ரவுடி கோஷ்டி உருவாக்கியது எப்படி?

"அந்த வெட்டுக்குத்து வழக்குக்காக நான் ஜெயிலில் இருக்கும்போது, கரடி ஆறுமுகம், கவுதம், மரக்கடை முருகன் ஆகியோர் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டாங்க. அதுக்குப் பிறகு வெளியில வந்த பிறகும் ஒண்ணாக இருந்தோம். எங்களோட அம்சராஜ் என்பவரும் சேர்ந்துக்கிட்டார்."

கோஷ்டியாகச் சேர்ந்ததும் ரவுடித்தனத்தைப் பெரிய அளவில் தொடங்கிவிட்டீர்களா?

"அப்படிச் சொல்ல முடியாது. என் கோஷ்டியைச் சேர்ந்த மரக்கடை முருகன், தலித் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் மக்களிடையே ரொம்ப அறிமுகமானவரா இருந்தார். அவருடைய பாப்புலாரிட்டி பிடிக்காததால் தங்கவேலு தலைமையிலான கோஷ்டி, அவரைக் காரணமில்லாம கொன்னுட்டாங்க. ஆனால் தங்கவேலுவுக்கு ஆதரவாகப் போலீஸார் செயல்பட்டாங்க. அதனால் இந்தக் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யாம வேற ஆட்களைப் போலீஸ் ஃபிக்ஸ் செய்திட்டாங்க. வெறுப்பா போச்சு. ரவுடிகளைப் போலீஸார் அழிப்பாங்கன்னு எதிர்பார்த்தா, அவங்களே ரவுடிகளுக்குத் துணை போனாங்க. பிறகு எங்களைக் காத்துக்கிட, சின்னச் சின்ன தவறுகளைச் செய்ய வேண்டியதாயிற்று.

இந்த நிலையில், எதிர்கோஷ்டித் தலைவன் தங்கவேலுவை என் குரூப்பைச் சேர்ந்த அம்சராஜ் வெட்டிட்டான். ஆனால் தங்கவேலு சாகலை. இரண்டு மாசம் கழித்து அம்சராஜை இருபது பேர் சேர்ந்து வெட்டிக் கொன்னுட்டாங்க.

இதுவரைக்கும் இரு கோஷ்டிகளின் மோதலால் என் நண்பர்கள் கவுதம், கரடி ஆறுமுகம், கரும்பாலை இளங்கோ, ஆப்பிள் பாண்டி, சுரேஷ்... இப்படி ஒன்பது பேரை இழந்துட்டேன். அதுபோல தங்கவேலு கோஷ்டியில், அவர் உள்பட பதினான்கு பேர் இறந்துட்டாங்க. அதுல நான்கு பேர் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள். இனி வெடிகுண்டு, கத்தி, துப்பாக்கி எதுவும் வேண்டாம் என்கிற நிலைக்கு வந்துட்டேன். அமைதியா வாழணும் என்கிற முடிவுக்கு வந்துட்டேன்."

திடீர் என இந்த முடிவுக்கு வரக் காரணம்...?

"ஆறு மாசத்துக்கு முன்னாடி ஜெயில்ல கூட்டம் போட்டோ ம். 'நிர்ப்பந்தத்தின் பெயரில் ஆயுதங்களைத் தூக்கினோம். ஆனால் அதில் ரொம்ப இழந்துட்டோ ம். அதனால் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம்'னு முடிவெடுத்தோம். பொடாவில் கைதாகி ஜெயிலுக்கு வந்துள்ள முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியும் மாவட்ட ம.தி.மு.க. செயலர் செவந்தியப்பனும் என்னைக் கூப்பிட்டு 'வன்முறை வேண்டாம். அகிம்சை வழியில் போ-'ன்னு சொன்னாங்க. அவங்களோட அட்வைசும் நான் திருந்த ஒரு காரணம்".

ரவுடித்தனமாகச் செயல்பட்ட நீங்கள் இனி அமைதியான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என எண்ணுகிறீர்களா...?

"நானும் மனிதன்தான். எனக்கும் நாட்டுப்பற்று மாநில உணர்வு எல்லாம் உண்டு. நான் உள்ளே (ஜெயிலில்) இருந்த போதும்கூட, கார்கில் வெற்றிக்குக் காரணமான ராணுவவீரர்களைப் பாராட்டி மதுரை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருக்கேன். அதுபோல அக்டோ பர் 12ஆம் தேதி என் தலைமையில் மதுரை ஜெயிலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் காவிரிப் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தாங்க. அப்ப ஜெயிலில் உள்ள என் எதிரிகளைக்கூட சந்திச்சு, உண்ணாவிரதம் இருக்க கேட்டுக்கிட்டேன்."

நீங்கள் திருந்தி விட்டீர்கள் என்று எப்படி நம்புவது...?

"சத்தியமாக நான் இனி வன்முறையில் ஈடுபட மாட்டேன். ஆனால் வெளியில் எனக்குப் போலீஸாரால்தான் ஆபத்து. என்னை ரவுடி ஆக்கணும்னு போலீஸ் பார்ப்பாங்க."

ஏன் போலீஸைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்?

"இப்ப என் மேல எந்த வழக்கும் கிடையாது. ஆனாலும் போலீஸ் இனி என்னை விட்டுவைப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? நிச்சயம் சுட்டுக் கொல்வாங்க அல்லது என் எதிரிகளிடம் என்னைப் பிடித்துக் கொடுத்து அவங்க கொன்னது மாதிரி செட்டப் செய்வாங்க. இந்த இரண்டில் ஒன்று நடக்கும். அதனால்தான் திரும்பவும் சொல்றேன். நான் ரவுடியாகச் சாக விரும்பவில்லை. எனக்கு எந்த வகையில் ஏற்படற சாவுக்கும் போலீஸ்தான் பொறுப்பு."

இனி என்ன செய்வதாக உத்தேசம்... திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என நினைக்கிறீர்களா...?

"இல்லை. மனித விடுதலைப்புயல் என்கிற அமைப்பை ஏற்படுத்தப் போகிறேன். மனிதநேயத்தைப் பற்றிப் பேசப் போகிறேன். ஜாதி மோதல்கள் ஒழியறதுக்காகப் பாடுபடப் போகிறேன். நான் கூப்பிட்டால் இந்த அமைப்பில் சேர ஆயிரம் இளைஞர்கள் இப்போதும் தயார். ஆனால் நான் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என போலீஸ் நம்பணும் உங்களைப் போலப் பத்திரிகைக்காரங்க நம்பணும்."

-சொல்லி முடித்த ரமேஷ், பேட்டி முடிந்ததற்கு அடையாளமாய்க் கையசைத்து புயலாய்க் கிளம்பிப் போனார்.

"புலி சைவத்துக்கு மாறுமா என்ன? இப்ப வேணுமின்னா தலைமறைவாக இருக்கலாம். சீக்கிரம் வெளியில வருவான். எங்கள் பார்வையில் படுவான். நல்லவனா இருக்கிறவங்களை நாங்க என்ன செய்யப் போறோம்? ஆனால் அவனால் சும்மா இருக்க முடியாது." ரமேஷ் பற்றி நாம் கேட்டபோது, இப்படி கேஷுவலாகச் சொன்னார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution