| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

நேற்று தாதாக்கள்... இன்று தலைவர்கள்...
என்கௌண்ட்டர் திகில்...
ஜூனியர் விகடன் 9-11-2003

என்கௌண்ட்டருக்குப் பயந்து பிரபல ரௌடிகளெல்லாம் சாதி அமைப்புகளுக்குள் தலையைத் திணித்துக்கொண்டு உலா வருவது ஒருபுறமிருக்க..

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், ஒரு காலத்தில் தாதாக்களாகத் தலையெடுத்து திரிந்தவர்களைத் தேடிப் பிடித்து, பதவியில் உட்கார வைத்துக் கொண்டிருக்கின்றன பி.ஜே.பி., சிவசேனா போன்ற கட்சிகள்!

"இந்து தலைவர்கள் மீதான தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பதுதான் இந்தப் பதவி பரிசளிப்பின் நோக்கம். இதெல்லாம் எங்கு போய் முடியுமோ?" என்று பொதுநல விரும்பிகள் பதற்றத்தோடு புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

மதுரை-அண்ணாநகர் பகுதியில் பிரபல ரௌடியாக இருந்தவர் ரமேஷ். மதுரைக்குள் எந்த இடத்தில் கொலை நடந்தாலும், முதலில் இவரைத் தேடித்தான் போலீஸ் போகும்.

'ஒருவேளை ரமேஷுக்கும் அந்தக் கொலைக்கும் தொடர்பே இல்லையென்றாலும், அந்தக் கொலையைச் செய்தது யார் என்ற விவரத்தையாவது கச்சிதமாக கணித்துச் சொல்லிவிடுவார்' என்பது போலீஸ் இவர்மீது வைத்திருந்த அபார நம்பிக்கை. சமீபத்தில் தா.கிருட்டிணன் கொல்லப்பட்ட போதுகூட, ரமேஷிடம் சென்று 'ஏதாச்சும் ரூட்டு தெரியுதாப்பா?' என்று விசாரித்துவிட்டுத்தான் போனது போலீஸ்!

ஒருபுறம் இப்படி இணக்கம் காட்டினாலும், ஒரு கட்டத்தில் ரமேஷின் அதிரடி நடவடிக்கைகள் போலீஸைக் கடுப்பாக்க, அவரைக் கண்டதும் சுடுமளவுக்கு உறவில் விரிசல் விழுந்தது.

இந்தச் சூழ்நிலையில், தன்மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் சமாளித்து வாதாடி விடுதலையான ரமேஷ், தனது போக்கையே மாற்றிக்கொண்டார்! ரௌடியிஸத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு, சமூக சேவைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

ஆனாலும், ரமேஷின் நடவடிக்கைகளை போலீஸ் சந்தேகப் பார்வையோடு கண்காணித்துவந்த நிலையில், அண்மையில் ரமேஷை கட்சிக்குள் வளைத்துப்போட்டு அமுக்கியிருக்கிறார்கள் பி.ஜே.பி-க்காரர்கள். அதோடு, பி.ஜே.பி-யின் மதுரை மாவட்ட விவசாய அணித் தலைவர் பதவியையும் கொடுத்து அவரைப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள்.

இப்போது, நெற்றியில் 'பளிச்'சென செந்தூரப் பொட்டு வைத்துக்கொண்டு, 'பாரத் மாதா கி ஜே...' கோஷம் போட்டபடி மதுரையை வலம் வருகிறார் ரமேஷ்!

பி.ஜே.பி.யின் இந்த ஸ்டைலிலேயே அவர்களின் கூட்டணித் தோழனான சிவசேனா கட்சியினரும் தங்கள் பங்குக்கு முன்னாள் ரௌடி ஒருவரைத் தேடிப்பிடித்து, அவருக்கு மதுரை மாவட்ட சிவசேனா தலைவர் பதவியை தந்து கொண்டாடியிருக்கிறார்கள்!

'டாக்' ரவி-இவர்தான் சிவசேனாக்காரர்கள் தேடிப் பிடித்திருக்கும் அந்த முன்னாள் ரௌடி!

ரவி பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை-எல்லீஸ் நகரில்தான். ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு படிப்புக்கு 'டாட்டா' காட்டிவிட்ட ரவி, மதுரை பைபாஸ் ரோட்டில் உயர்சாதி நாய்களை வியாபாரம் பண்ணும் தொழில் செய்துகொண்டிருந்தார்.

அப்போது, இவரது வீட்டுக்குப் பக்கத்திலிருந்த மைதானத்தில், சுந்தர் என்ற ரௌடி கஞ்சா வியாபாரம் செய்ய, ரவி அதை கண்டித்திருக்கிறார். இருவருக்கும் மோதல் வலுத்துவந்த நிலையில். ஒருநாள், நடுரோட்டில் வைத்து சுந்தரையே போட்டுத் தள்ளிவிட்டார்கள் ரவியின் ஆட்கள்!

இந்த சம்பவத்துக்குப் பிறகு ரவிக்கு 'டாக்' ரவி (நாய் வியாபாரம் பண்ணியதால் இந்தப் பெயராம்!) என பில்டப் கொடுத்து, பிரபல ரௌடியாக்கிவிட்டார்கள்! சுந்தர் கொலையில் 'டாக்' ரவியைத்தான் முதல் குற்றவாளியாகக் காட்டியது போலீஸ்.

பிறகு, பல்வேறு வழக்குகளுக்காக மதுரை சிறையில் அடைக்கப்பட்ட 'டாக்' ரவி, நாளடைவில் தன்னை ஒரு ஆன்மீகவாதியாக அடையாளம் காட்டிக்கொண்டார்!

சிறையில் இருந்தபடியே தனது ஆட்களைவிட்டு வெளியில் விநாயகர் ஊர்வலம் நடத்தினார். அதோடு, சிறைக்குள்ளும் இவர் ஆன்மீகப் பிரசாரம் மேற்கொள்ள முகம் சுளித்த அல்-உம்மா கைதிகள் அதுபற்றி மேலிடம் வரைக்கும் புகார் தட்டிவிட்டதாகத் தகவல். ஆனாலும் தனது பிரசார பணியை நிறுத்தாமல் 'டாக்' ரவி தொடர, இந்தத் தகவல் கேட்டு சிலிர்த்திருக்கிறார்கள் சிவசேனா கட்சியினர்.

'டாக்' ரவி, செப்டம்பர் 7-ம் தேதி சிறையிலிருந்து பெயிலில் வெளியே வந்தார்!

வந்ததும் வராததுமாக ஓடோ டி வந்து இவரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுப் போன சிவசேனா பொறுப்பாளர்கள், கடந்த வாரம் இவரை மதுரை மாவட்ட சிவசேனா கட்சித் தலைவராக அறிவித்திருக்கிறார்கள்.

ஒருகாலத்தில் பாண்ட் - ஷர்ட் மாட்டிக்கொண்டு, அனல் கக்கும் பார்வையோடு வலம்வந்து கொண்டிருந்த 'டாக்' ரவி, வேட்டி - சட்டை என காஸ்ட்யூமை மாற்றிக் கொண்டிருப்பதோடு, நெற்றியிலே செந்தூரப்பொட்டு, கழுத்திலே காவித்துண்டு என கனிவான கெட்-அப்பில் கலக்குகிறார்!

சேர்ந்திருக்கும் இடத்துக்கு ஏற்றாற்போல் 'சத்ரபதி' ரவிக்குமார் என பட்டப்பெயரை மாற்றிக் கொண்டுவிட்ட 'டாக்' ரவியை, எல்லீஸ் நகரிலுள்ள அவரது நண்பரின் வீட்டில் சந்தித்தோம்.

"1992-லிருந்தே நான் ஆர்.எஸ்.எஸ்-லயும் இந்து முன்னணியிலயும் உறுப்பினரா இருக்கேன். இன்றைய சூழ்நிலையில், மதத் தீவிரவாதத்துக்குப் பதிலடி கொடுக்கணும்னா இந்து அமைப்புகளுக்கு வலுவான ஆட்கள் தேவை. எல்லாவற்றையுமே பேசிப் பேசித் தீர்த்துவிட முடியாது. போராடவேண்டிய விஷயங்களுக்கு போராடித்தான் ஆகணும். அதுக்காகத்தான் என்னை இந்தப் பதவியில் உட்கார வைத்திருக்கிறார்கள். போகப் போகப் பாருங்கள்... எங்கள் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும்!" என்றார் மர்மமாக.

"என்கௌண்ட்டர் ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ளத்தான் உங்களைப் போன்ற தாதாக்கள் இப்படி அரசியல் அவதாரம் எடுப்பதாகச் சொல்கிறார்களே?" என்று நாம் கேட்டபோது, முகத்தை சீரியஸாக்கிக்கொண்ட 'டாக்' ரவி, "மத்தவங்க எப்படியோ... நான் ஓடி ஒளியலை. என்னைக் கூட என்கௌண்ட்டர் பண்ணப்போறதா வதந்தி கிளப்பறாங்க. ஆனா, அதையெல்லாம் நான் நம்பலை.

அறியாப் பருவத்தில், ரத்த முறுக்கில், விவரம் புரியாமல் நாங்கள் தடம் மாறிப்போனது உண்மைதான். ஆறேழு வருடங்கள் ரௌடிகளாக இருந்து என்னத்தை சாதிச்சோம்? நண்பர்களைப் பலி கொடுத்ததைத் தவிர வேறென்ன நடந்திருக்கு?

நித்தம் நித்தம் போலீஸுக்கும் எதிரிகளுக்கும் பயந்து போராடிக் கொண்டிருக்கிற ரௌடித் தொழில் வேண்டவே வேண்டாம்னுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.

என்னைப் போலவே, என்னைச் சுற்றியுள்ள நண்பர்களையும் என் வழிக்குக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதில் வெற்றி பெறமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..." என்றார்.

"நீங்கள் திருந்திவிட்டதாகச் சொல்வதை போலீஸும் எதிரிகளும் அவ்வளவு சுலபமாக நம்பிவிடுவார்களா?" என்றபோது.

"இந்த நிமிடம் வரை போலீஸ் என்னைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது. 'தவறுகளைச் செய்துவிட்டோ ம். இனிமேலாவது நல்லது செய்வோம்' என்று முடிவெடுத்துதான் நாங்கள் இந்த வழிக்கு வந்திருக்கிறோம். போலீஸ் எங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, திருந்தி வாழ வழி விடும் என நம்புகிறேன்..." என்ற 'சத்ரபதி' ரவிக்குமார், தோளில் இருந்த காவித்துண்டை இருபுறமும் சமமாக இழுத்துவிட்டுக்கொண்டு, "பாரத் மாதா கி ஜே!" என்று சொல்லி நம்மை வழியனுப்பிவைத்தார்.

ரமேஷையும் 'டாக்' ரவியையும் பார்த்து மதுரையிலுள்ள இன்னும் சில ரௌடிகளுக்கும் ஞானம் பிறந்து கொண்டிருப்பதாகப் பேச்சு. 'யாரைப் பிடிச்சு, எந்தக் கட்சிக்குள் நுழையலாம்?" என இவர்களில் சிலர் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்க முட்டி மோத ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் தேசப்பற்றுள்ள எந்தக் கட்சியில் அடைக்கலம் தரப்போகிறார்களோ?

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution