| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

"விழிப்புணர்வு ஏற்படுத்த மோடி வருகிறார்!"

கபிலன்

குமுதம் ரிப்போர்ட்டர், 2.12.2004

மதுரை அண்ணாநகர் ரமேஷ்... சிறிது காலம் மௌனமாக இருந்தவர் மீண்டும் பரபரப்பாகியிருக்கிறார். சங்கராச்சாரியார் கைது குறித்து அவர் அச்சடித்து ஒட்டியுள்ள போஸ்டர், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தாதாக்களில் ஒருவர் ரமேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று முறை கைதானவர். இருபத்து நான்கு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் தொடர்பாகக் கைதாகி, ஒன்பதாண்டுகள் சிறையில் இருந்தவர். பின்னர் இவர்மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்திலிருந்தும் விடுதலையானவர். என்றாலும், போலீஸார் பார்வை அவர்மீது இருந்துகொண்டேதான் இருக்கிறதாம். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ என்னவோ திடீரென பா.ஜ.க.வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். போஸ்டர் குறித்து உளவுத்துறை விசாரித்துவந்த நேரத்தில், நாமும் அது தொடர்பாக ரமேஷைத் தேடினோம். நீண்டதேடலுக்குப் பின்னர் போனில் சிக்கினார்.

இப்படிக் குழாயடிச் சண்டை வார்த்தைகளைப் (மொள்ளமாரி) பிரயோகித்து போஸ்டர் அச்சடிக்க வேண்டிய அவசியம் என்ன?

"என் ஆதங்கத்தைத் தெரிவிக்க வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. 'ஐக்கிய முற்போக்கு' என்கிறார்கள். 'முற்போக்கு' என்றால், நேர்மையானது. நடுநிலையானது. என்றுதானே அர்த்தம். சுருக்கமாகச் சொன்னால் முற்போக்குவாதிகள் எனச் சொல்லிக்கொள்பவர்களுக்கு இந்து மதம் மட்டுமே பிடிக்கவில்லை. அதனால்தான் எனது போஸ்டரில் முற்போக்கு என்ற வார்த்தையைப் பிரயோகப்படுத்தினேன். அவர்களைக் கடிந்துகொள்ள 'மொள்ளமாரி' என்ற வார்த்தையையும் உபயோகப்படுத்தினேன்."

சங்கராச்சாரியாரைக் கைது செய்தது அ.தி.மு.க. அரசு. அப்படியிருக்கையில் நீங்கள் ஜெயலலிதாவை விமர்சிக்காதது ஏன்?

"ஏன்.. முதல்வரையும்தான் சொல்கிறோம். 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்கிறார். தர்மபுரியில் உயிரோடு கல்லூரி மாணவிகள் மூன்று பேர் எரிக்கப்பட்டபோது, தனது கட்சியினருக்கு இதைச் சொல்லியிருக்கலாமே. ஜெயலலிதாவும் சிறுபான்மையினர் ஓட்டுக்களைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளுவதற்காக வேஷம் போடுகிறார். 'சங்கராச்சாரியாரையே கைது செய்து விட்டேன்' எனச் சொல்லி இனி ஓட்டுக் கேட்பார். அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் தன்னை 'இரும்புப் பெண்மணி' என மற்றவர்கள் கூற வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறார். கருணாநிதி-ஜெயலலிதா என இருதரப்பினரும் செய்வதும் ஓட்டுக்காகத்தான்."

சங்கராச்சாரியாருக்கும் சங்கர்ராமன் கொலைக்கும் தொடர்பிருப்பதாக காவல்துறை திட்டவட்டமாகக் கூறுகிறதே?

"என்னைப் பொறுத்தவரை அவர் (சங்கராச்சாரியார்) ஜனாதிபதி அப்துல் கலாமை நிற்கவைத்துப் பிரசாதம் கொடுத்தார். ஜெயலலிதாவை உட்கார வைத்து மரியாதை செய்தார். அதற்கான தண்டனையைத்தான் அவர் அனுபவிக்கிறார் என நினைக்கிறேன். என்றாலும் அவர்மீது மக்களுக்குப் பக்தி இருக்கத்தான் செய்கிறது".

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியாருக்கு ஆதரவுக் குரல் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்கிறீர்கள்?

"அந்தத் தவறை அவர் செய்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கை எங்களிடம் நிரம்ப இருக்கிறது. அப்படியே வைத்துக்கொண்டால்கூட ஒரு சாப்பாட்டில் வைக்கப்படும் பல்வேறு காய்கறிகளில் ஒரு காய் நன்றாக இல்லையென்றால் ஒட்டுமொத்த சாப்பாட்டையே தூக்கி எறிந்துவிடமாட்டோ ம். அதுபோலத்தான், நமது இலக்கு இந்துமதம். காக்கப்பட வேண்டியது இந்து மதம். அதில் கவனமாக இருக்கிறோம். இந்நிலையில், இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் அடுத்தகட்ட வேலை. அதற்காக மதுரையில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பங்கேற்கும் விழிப்புணர்வுக் கூட்டத்திற்கான ஏற்பாடு வேலையைத் தொடங்கியிருக்கிறோம்!" என்றார் ரமேஷ்.

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution