| Downloads | Contact Me | Feedback |
Tamil Font Problem? |

The Lost Hours  கடவுளுக்கு ஒரு சாபம் 

Google   wwwprramesh.com


download e-books
 

நூல் விமர்சனம்
தொலைந்த நேரங்கள்

எஸ்.சோமு

தாமரை ஜனவரி 2005

(ஒன்பது ஆண்டுகள் சிறைக்கு வாக்கப்பட்ட ஒரு இளைஞனின் சிந்தனை வெடிப்புகள்)

15 ஆண்டுகளுக்கு முன்னால் இளமை துள்ளும் நிலையிலிருந்த ரமேஷ் என்கிற அந்த மதுரை அண்ணாநகர் ரஜினி ரசிகன், ரஜினியின் பட பேனர் வைக்கும் தகராறில் ஒரு கட்சிக்காரனை வெட்டி விட்டான். ஆடுத்துத் தன் அண்ணன் இளநீர் கடையில் மாமூல் கேட்டுத்தகராறு செய்த ஒரு தாதாவைத் தாக்கினான். விளைவு? போலீசின் பார்வையில் விழுந்தான். சிறைப்பட்டான்.

அதிலிருந்து சிறைக்குப் போவதும் வருவதுமாக இருந்த ரமேஷின் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் தொடர்ச்சியாகப் பதிவாகின. இந்தப் பதினைந்து ஆண்டுகளில் ஒன்பது ஆண்டுகளைச் சிறையில் கழித்திருக்கிறான்.

முதல் முறை சிறை சென்ற போது அவனோடு ஒட்டிக் கொண்ட சில சிறைத்தோழர்கள் அவனைக் கவர்ந்தனர். வெளியில் வந்ததும் அவர்களெல்லாம் ஒன்றாகவே உலாவியதால் பேட்டை வாசிகளின் கண்களுக்கு ரௌடிப் பட்டாளமாகவே தோன்றினர்.

இவர்களுக்கு எதிராக ஒரு ரௌடி கோஷ்டி செயல்பட்டது. இவர்களிடையேயான மோதலில் மொத்தம் 23 பேர் (இரண்டு தரப்பிலுமாக) கொல்லப்பட்டனர். இந்த வன்முறை வளர்ச்சிப் பாதையில் அண்ணாநகர் ரமேஷ், ரௌடி ரமேஷாகவும் தாதா ரமேஷாகவும் உருவெடுத்தார்.

அந்த ரமேஷ் தான் தனது ஒன்பதாண்டு கால சிறை அனுபவத்தை 'தொலைந்த நேரங்கள்' என்ற தலைப்பில் நூலாக்கித் தந்திருக்கிறார். நூலில் பல இடங்களில் பேச்சுநரைசரளமாகக் காணப்படுகிறது. தாதாக்கள் அல்லது ரௌடிகளுக்கும் போலீசுக்கு முள்ள உறவுகள் பச்சையாக விளக்கப்பட்டிருக்கின்றன.

தன் நண்பர்களை உயிரினும் மேலாக நேசித்தால், அவர்கள் ஒவ்வொருவர் தாக்கப்பட்ட போதும் வெறியேறி, வன்முறையை வன்முறையாலேயே சந்திக்க முடிவெடுத்து ரத்தக்கறை படிந்த பாதையில் வெகுதூரம் சென்றுவிட்டார் ரமேஷ். நீண்ட சிறைவாசம் அவரை சிந்திக்க வைத்திருக்கிறது. முடிவில் திருந்தவும் வைத்திருக்கிறது. அதனால்தான் 'கொடியவர்களாக வாழ்வதும் கோழைகளாக வாழ்வதும் மாபெரும் குற்றம்' என்று அவரே கூறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

14 ஆண்டு கால அல்லல்களுக்குப் பிறகு, வன்முறையைக் கைவிட்டு மனித நேயத்திற்காகப் போராடும் போராளியாக இப்போது வாழவிரும்புகிறார். ஆனால், ரௌடி முத்திரை குத்திவிட்ட போலீஸ், அவர்நாணயமாக வாழ்வதை விரும்பவில்லையாம். 'நாலு பேரை வெட்டினமா; மாமூல் வாங்கினமா, எங்களுக்கு ஏதாவது கொடுத்தமா என்று இரு. இந்த நல்லதெல்லாம் செய்யாதே. இதெல்லாம் எங்களுக்குப் பிடிக்காது' என்று ஒரு போலீஸ் அதிகாரி ரமேஷுக்கு அறிவுரை கூறினாராம். வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல என்று உணர்ந்து திருத்தி அறவழி வாழ நினைக்கும் ஒருவருக்கு இப்படியா அறிவுரை தருவது என்ற ரமேஷின் குமுறல் நம்மைக் கொஞ்சம் நெகிழத்தான் வைக்கிறது.

போலீஸ் எப்படி என் கவுண்டர் நடத்தும் என்று விரிவாகவே விளக்கியிருக்கிறார். வெளியில் காவலர்களின் அதீதமான அட்டகாசம் இவரைப் பெரிதும் பாதித்தாலும், சிறைக்குள்ளே இருந்த காவலர்கள் சக கைதிகளின் நேர்மையான மனமாற்றத்திற்கு மிகவும் முயன்றிருக்கிறார் ரமேஷ். சிறைக்குள் பற்பல சீர்திருத்தங்களைச் செய்ததாகவும் மன நிறைவு கொள்கிறார்.

அந்தத் தாக்கத்தால், சிறையிலிருக்கும் போதே ஜனநாயகத்தையும் மனித நேயத்தையும் வலியுறுத்தி கவிதைகள் எழுதியிருக்கிறார். சிறைவாழ்க்கை இவரை அதிகமாகவே சிந்திக்க வைத்திருக்கிறது. சாதி, மதம், கடவுள், மொழி, வேலையின்மை, உணவுப் பழக்கம், அரசியல்வாதிகள் என்று பல்வேறு விஷயங்களைப் பற்றி அவருடைய கருத்துக்களை இந்த நூலில் ஆங்காங்கே விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அவை எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அவரின் வாதமுறைகள் பாராட்ட வைக்கின்றன.

அவருடன் சிறையிலிருந்த திராவிடக் கழக மாவட்டச் செயலாளர் சிகாமணியோடு கடவுளைப் பற்றி விவாதித்திருக்கிறார். ஒரு முஸ்லிம் மதத் தீவிரவாதியுடன் மதம் பற்றி சர்ச்சை செய்திருக்கிறார். அவற்றில்தானே வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சியடைகிறார்.

அத்தை மகன் திருமணத்தில் தனது தாயைக் கடைசியாகப் பார்த்ததை விவரிக்கும்போது அவரின் ஈர உள்ளம் நன்றாகவே பளிச்சிடுகிறது.

கடைசியாகச் சிறையிலிருந்து வெளியே வந்தாயிற்று. எல்லா வழக்குகளும் தள்ளுபடியாகிவிட்டன. இப்போது அவர் ஒரு சுதந்திர மனிதன். என்றாலும் காவல்துறை தன்னை நிம்மதியாக இருக்கவிடாது என்ற மன உளைச்சல் அவரை நெருக்கிக் கொண்டே இருக்கிறது. அதை அப்படியே ஊருக்கும் உலகுக்கும் வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார். இரண்டு பத்திரிகைப் பேட்டிகள் மூலம் அக்கருத்தைப் பதிவும் செய்திருக்கிறார்.

மதுரையில் 'மனித விடுதலை இயக்கம்' என்ற ஒன்றை ஆரம்பித்து, எண்ணற்ற இளைஞர்களைச் சேர்த்துவைத்து, மக்கள் நலப்பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் செய்த பல பணிகள் இந்நூலில் விரிவாகவே இடம் பெற்றிருக்கின்றன.

'கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறினால்தான் உங்களுக்கு உண்மையான மரியாதை கிடைக்கும்' என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தி நல்லாற்றுப்படுத்துகிறார்.

தன்னை மீண்டும் மாட்டிவிடுவார்களா என்று இவருக்கு போலீசிடம் ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் ஏதாவதொரு அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள நினைத்தவர் இப்போது பாரதீய ஜனதாவில் சேர்ந்திருக்கிறார்.

'நான் பாரதீய ஜனதா படகில் ஏறின கதையும் அவர்கள் தன்னை ஏற்றிக் கொண்ட கதையும் பெரிய கதை. அதை இப்போது கூற மாட்டேன். ஏனென்றால் படகில் இருந்து இறக்கி விட்டுப் போய்விடுவார்கள்' என்று மனந்திறந்து எழுதுகிறார்.

எஞ்சியிருக்கிற நாட்களில் நாட்டிற்கு உழைக்க வேண்டுமென்கிற எண்ணம் கொண்டு செயலாற்றும் ரமேஷ், 'ஏதாவது ஒரு நாள் என் கனவுகள் நனவாகும்' என்று உறுதியாக நம்புகிறார்.

அவர் எழுதிய புதுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் பல இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மே தினத்தை வாழ்த்தும் மூன்று கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

மனித நேயத்தை இப்போது மிகவும் நேசிக்கிற இப்படைப்பாளி, 'இயற்கையே, உன் இதயத்தில் மனிதநேயம் மடிந்து விட்டதா? அல்லது மனித குணம் உன் நெஞ்சில் புகுந்துவிட்டதா?' என்று கேட்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

வரதட்சிணைக்குப் பயந்து வாய்க்காலில் எறியப்பட்ட பச்சிளங் குழந்தை அம்மாவைப் பார்த்துக்கேட்கிறது, 'உன் அம்மா உன்னை எறியவில்லை. ஏன் அம்மா என்னை எறிந்தாய்?' சிலிர்க்க வைக்கும் சிந்தனைவரிகள்.

'மண்ணில் பிறப்பது முக்கிய மல்ல சாதிப்பதே முக்கியம்' என மனிதனுக்கு அறிவுறுத்தும் கவிதை கூறுகிறது.

'தாய் நாட்டை தழைக்க விடாமல் தடைக்கல்லாய் இருக்கும் சாதி மத தடைக்கல்லைக் தர்த்தெறிவோம்' என்று சூளுரைக்கும் ரமேஷ் தான் இன்று சூழ்நிலை காரணமாக மதவாதக் கட்சியில் ஒண்டியிருக்கிறார்.

நிலாவைப் பார்த்து 'ஏழைக்கு வெளிச்சம் காட்டும் குண்டு 'பல்ப்' என்று ஒப்பிடுவது நயமாக இருக்கிறது.

'வாள் கை எடுத்தால் வாழ்க்கை சிதைந்து விடும்' என்று அனுபவ பூர்வமாகப் பேசும் ரமேஷ் 'விதைத்திடு புனிதத்தை! வளர்த்திடு மனிதத்தை! உயர்த்திடு பாரதத்தை!' என்பது அவரது அனுபவ முதிர்ச்சியையே காட்டுகிறது.

இந்நூல் முழுவதும் நூலாசிரியரின் 15 ஆண்டு காலப் போராட்ட அனுபவம் பளிச்சிடுகிறது. மனந்திருந்தி, மற்றவர்களையும் திருத்தப்பாடுபடுகிறவரின் சுயசரிதை. ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் மலிந்திருந்தாலும் சுவை குன்றாமல் எழுதப்பட்டிருக்கிறது. புதிய பார்வை! புதிய முயற்சி பாராட்டலாம்.

'தொலைந்து நேரங்கள்'
ஆசிரியர்: அண்ணாநகர் பி.ஆர்.ரமேஷ்
வெளியீடு: வைகை மீனாட்சி ரிசர்ச் பவுண்டேசன்,
எச்.ஐ.ஜி.50, 80, அடி சாலை,
அண்ணாநகர், மதுரை-20.
விலை ரூ.100

இந்த விமர்சனத்துக்கு பி.ஆர். ரமேஷின் பதில்....

 

தொகுப்பு

 

Website best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution